×

மெட்ரோ பணிகளுக்காக ஜூனில் அஜந்தா மேம்பாலம் இடிப்பு: மெட்ரோ அதிகாரி தகவல்

மாதவரம்: மெட்ரோ ரயில் பணிகளுக்காக ஜூன் மாதம் அஜந்தா மேம்பாலம் இடிக்கும் பணி தொடங்கப்படும் என மெட்ரோ அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். சென்னை மெட்ரோ ரயில் முதல்கட்ட திட்டம் 54.1 கி.மீ. தொலைவிற்கு விம்கோ நகர் முதல் விமான நிலையம் வரையிலும், சென்ட்ரல் முதல் பரங்கிமலை வரை என 2 வழித்தடங்களில் முழுமையாக செயல்பாட்டில் உள்ளது. சென்னையில் முதல்கட்ட திட்டத்தின் கீழ் நீல வழித்தடம், பச்சை வழித்தடம் என இரண்டு வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதை கிளாம்பாக்கம் வரை நீட்டிக்கும் திட்டம் முன்னெக்கப்பட்டுள்ளது.

அதேபோல் 2வது கட்டத்தில் மொத்தம் 118.9 கிலோ மீட்டர் தூரத்திற்கான திட்டப்பணிகள் வேகமாக நடந்து வருகிறது. இந்த திட்டம் 2026ம் ஆண்டு நிறைவு பெற்று பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் ஊதா வழித்தடமான மாதவரத்திலிருந்து சிறுசேரி சிப்காட் வரையிலான 45.8 கி.மீ. வழித்தடம் 3ன் ஒரு பகுதியான அடையாறு சந்திப்பில் நிலத்தடி மெட்ரோ நிலையம் அமைய உள்ளது. இதில் கிரீன்வேஸ் சாலை மற்றும் அடையாறு சந்திப்பு ஆகிய மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு இடையில் அடையாறு ஆற்றின் கீழ் இரட்டை சுரங்கப்பாதைகள் அமைக்கப்பட உள்ளன. இது கிரீன்வேஸ் சாலை மற்றும் அடையாறு டிப்போ நிலையங்களை ஓஎம்ஆர் சாலைக்கு செல்ல இணைக்கும் வகையில் பிரமாண்டமாக அமைக்கப்பட உள்ளது.

அடையாறு மேம்பாலத்தின் ஒரு பகுதிக்கு கீழ் இரட்டை சுரங்கப்பாதைகள் மற்றும் அடையாறு சந்திப்பு மெட்ரோ ரயில் நிலையத்தை அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளதால் அடையாறு மேம்பாலத்தின் 5 தூண்கள் இருக்கும் அளவிற்கான பகுதியை இடிக்க மெட்ரோ நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதேபோல் ராதாகிருஷ்ணன் சாலை – ராயப்பேட்டை சந்திப்பில் உள்ள அஜந்தா மேம்பாலம் இடிக்கப்பட உள்ளது. இதற்கான ஒப்பந்தம் கோரப்பட்டு பாலம் இடிக்கப்படுகிறது. மேம்பாலங்கள் இடிக்கப்பட்டு 4 ஆண்டுகளுக்குப் பின்னர் சென்னை மாநகராட்சி மற்றும் மெட்ரோ நிறுவனம் இணைந்து மீண்டும் மேம்பாலம் கட்டப்படும். இதன் மூலம் அடையாறு சந்திப்பில் 4 வழிச்சாலை மேம்பாலம் அமைய உள்ளது. இதற்கான கட்டுமான பணிகள் அடுத்த ஆண்டு தொடங்கும் என மெட்ரோ நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மெட்ரோ நிர்வாக அதிகாரி கூறுகையில், ‘‘அடையாறு மேம்பாலத்தின் ஒரு பகுதி இடிக்கப்படுவதால் போக்குவரத்து சீர்செய்ய, ஒருவழியாக மாற்றப்பட உள்ளது. தொடக்கத்தில் பாலத்தின் ஒரு பகுதியை இடித்துவிட்டு தற்காலிகமாக இரும்பு பாலம் அமைக்க திட்டமிடப்பட்டது. ஆனால் தற்காலிக பாலத்தை கட்டி அகற்றுவதில் எந்த பயனும் இல்லை. இது கான்கிரீட் பாலத்தை விடவும் செலவு அதிகம். இதனால் இடிக்கப்படும் மேம்பாலத்திற்கு சென்னை மாநகராட்சி மற்றும் மெட்ரோ நிறுவனம் இணைந்து பாலம் கட்டக்கப்படும்.

ராதாகிருஷ்ணன் சாலை முதல் ராயப்பேட்டை சந்திப்பில் ராயப்பேட்டை நோக்கி செல்லும் அஜந்தா மேம்பாலம் ஜூன் மாதம் இடிக்கப்படும். மேம்பாலம் அகற்றப்பட்ட பின் அங்கு போக்குவரத்து பாதையை மாற்றும் திட்டம் உள்ளது. இதற்காக சென்னை போக்குவரத்து காவல்துறையிடம் போக்குவரத்து மாற்றம் குறித்து பரிந்துரை வழங்கப்பட்டுள்ளது,’’ என்றார்.

* அடையாறு மேம்பாலம்
அடையாறு மேம்பாலத்தில் இருந்து பெசன்ட் நகர் மற்றும் திருவான்மியூர் அதாவது எல்பி ரோடு செல்லும் பகுதி இடிக்கப்படுகிறது. கீழே இரட்டை சுரங்கப்பாதைகள் செல்ல உள்ளதால் அங்கு அமைக்கப்பட்டுள்ள செங்குத்தான தூண்கள் அகற்றப்பட வேண்டியுள்ளது. அதன்படி ஆவின் பாலகம் பகுதியில் உள்ள பாலம் இடிக்கப்படுகிறது. அடையாறு பேருந்து பணிமனையின் அருகில் 15 மீட்டர் ஆழத்தில் மெட்ரோ நிலையம் அமைகிறது.

The post மெட்ரோ பணிகளுக்காக ஜூனில் அஜந்தா மேம்பாலம் இடிப்பு: மெட்ரோ அதிகாரி தகவல் appeared first on Dinakaran.

Tags : Ajantha ,Metro ,MADHAVARUM ,Ajantha Maharam ,Metro Railway ,Ajanda Promotion ,
× RELATED சென்னை மெட்ரோ ரயில்களில் ஏப்ரல்...